×

பெருங்குடியில் உடைப்பு ஏற்பட்ட பிரதான ராட்சத குடிநீர் குழாய் சீரமைப்பு: மின் விநியோகம் சீரானது

 

துரைப்பாக்கம், ஜன.29: பெருங்குடியில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததை தொடர்ந்து, குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டு, அப்பகுதியில் சீரான மின்சாரம் வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி, 14வது மண்டலம், பெருங்குடி வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவில் 45 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இங்கிருந்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து செல்லும் பிரதான ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் சாலையில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த சாலையை ஒட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் புகுந்து, மண் அரிப்பு ஏற்பட்டு, குடியிருப்பின் தரைதளம் அருகே ராட்சத பள்ளம் உருவானது. இதனால் தரைதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் பைக்குகள் அந்த பள்ளத்தில் விழுந்தது. மேலும் அடுக்குமாடி குடியிருப்பையொட்டி அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்து குடியிருப்பு மீது விழுந்தது.

இதனால் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. அச்சமடைந்த குடியிருப்பு வாசிகள் அங்கிருந்து அவசரமாக வெளியேறினர். மேலும் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், சாலையில் 10 ஆழம் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அவ்வழியே போக்குவரத்து தடை செய்யப்பட்டது. குடிநீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடி வீணானதால் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.

தகவலறிந்த குடிநீர் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் உடைந்த ராட்சத குடிநீர் குழாயை சரிசெய்து, அதன்மீது கான்கிரீட் கலவை கொட்டி சீரமைத்தனர். மேலும் அங்கு குடியிருப்பு மீது சாய்ந்த முறிந்து விழுந்த டிரான்ஸ்பார்மரை அகற்றி, குடியிருப்பு வாசிகளுக்கு சீரான மின்சாரம் வழங்கப்பட்டது. சாலை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

The post பெருங்குடியில் உடைப்பு ஏற்பட்ட பிரதான ராட்சத குடிநீர் குழாய் சீரமைப்பு: மின் விநியோகம் சீரானது appeared first on Dinakaran.

Tags : Perungudi ,Durai Pakkam ,Chennai Corporation ,14th Zone ,Veerapandiya Kattabomman Street, Perungudi ,Dinakaran ,
× RELATED கொளத்தூர் மற்றும் துரைப்பாக்கத்தில் மழை..!!